கிருஷ்ணகிரி, தருமபுரியில் புதிய கற்கால மனிதர்கள் குறித்து ஆய்வு :

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங் களில் புதிய கற்கால மனிதர்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாக தொல்லியல் அலுவலர் பரந்தாமன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், தமிழக அரசு தொல்லியல் துறை, கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில், உலக மரபு வார விழாவையொட்டி ஒருநாள் தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமன், மயிலாடும்பாறை அகழாய்வு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்திய வரலாறு. எழுதப்பட்ட சான்றுகளை அடிப்படையைச் சொல்வது வரலாறு. ஆனால் தொல்லியல் இன்றி வரலாறு கிடையாது. மனிதர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஆய்வதே அகழாய்வு. 1888-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழாய்வு செய்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது. மயிலாடும்பாறையில் சங்ககால மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன.

மனிதர்கள் வாழ்ந்த காலத்தை தொல்பழங்காலம், வரலாற்றுக் காலம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் புதிய கற்கால மனிதர்கள் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. அக்காலத்து மக்கள் குகைகளிலும், மலை அடிவாரத்திலும் வாழ்ந்து வந்ததற்கான காலச்சக்கரம் மற்றும் பண்பாட்டு சான்றுகள் தெரிய வருகிறது.

ஆய்வின் மூலம் அக்காலத்தில் மக்கள் வாழ் விடப்பகுதியும், அவர்களின் ஈமக்குழிகளும் அருகருகே இருந்ததற்கான சான்றுகள் இங்கே கிடைக்கின்றன. வரலாற்றுத் துறை மாணவர்கள் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகளில் கலந்து கொண்டு நம் முடைய பண்டைய வரலாற்றை வெளிக் கொண்டுவர உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE