தூத்துக்குடியில் பிசான நெல் சாகுபடி பணி தீவிரம் : 10 ஆயிரம் ஹெக்டேரை தாண்டும் என நம்பிக்கை

By செய்திப்பிரிவு

பருவமழை மற்றும் அணைகளில் தண்ணீர் திறப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள குளங்களிலும் 75 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக பிசான நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். கருங்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி வட்டாரங்களில் நெல் நாற்றங்கால் தயாரித்தல், நடவு பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை சுமார் 1,100 ஹெக்டேர் பரப்பில் பிசான நெல் நடவு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு மாவட்டத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பிசான நெல் சாகுபடிக்கு இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானாவாரி பகுதிகளிலும் குளங்கள் நிரம்பியிருப்பதாலும், கிணறுகளில் தண்ணீர் இருப்பதாலும் விவசாயிகள் பலர் இந்த ஆண்டு நெல் நடவு செய்துள்ளனர். எனவே, இலக்கைத் தாண்டக்கூடும்.

விவசாயிகளுக்கு நெல் விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை வேளாண்மை துறை சார்பில் 150 டன் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பை 16, டிபிஎஸ் 5, பிபிடி 5204, என்எல்ஆர் 34449, டிகேஎம் 13 ரக நெல் விதைகள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. அடி உரமாக பயன்படுத்த கலப்பு உரங்கள் சுமார் 2,000 டன் இருப்பில் உள்ளது. பொட்டாஷ் உரம் 1,000 டன் உள்ளது. யூரியா உரம் தேவைக்கு ஏற்ப வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் 1,200 டன் யூரியா வரவுள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்ற மூன்று கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உரங்களுடன் வேறு இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடைப்படையில் 5 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்