ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகிலுள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிகிறார். திமுக தொழிற்சங்க நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று முன்தினம் பணியில் இருந்த அவர், மதுரை- திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை ஓட்டினார்.
ஆரப்பாளையத்திலிருந்து புறப்பட்டு காளவாசல் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று, பேருந்தை முந்திச் செல்வதற்கு முயன்றது. குறுகலான சாலை, வாகன நெருக்கடியால் கார் ஓட்டுநரால் பேருந்தை முந்த முடியவில்லை. காரில் லேசாக பேருந்து உரசியதாக தெரிகிறது. முடக்குச் சாலை அருகே பேருந்தை முந்திய கார் ஓட்டுநர் சுரேஷ் பேருந்தை வழிமறித்து, பேருந்து ஓட்டுநர் முத்துகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். அவர் கையில் வைத்திருந்த இரும்புக்கம்பியால் பேருந்து கண்ணாடியை உடைத்தார். அவர் தாக்கியதில் பேருந்து ஓட்டுநரின் வலதுகையில் படுகாயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் அடுத்தடுத்து வந்த அரசு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சாலையில் பேருந்துகளை நிறுத்தினர். பேருந்து ஓட்டுநரை தாக்கிய கார் ஓட்டுநரை உடனே கைது செய்ய வலியுறுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆணையர் ரவீந்திரன், எஸ்எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட போலீஸார் சிசிடிவி கேமராக்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரை கண்டுபிடித்தனர். அவர் சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சேர்ந்த சுரேஷ் (35) எனத் தெரியவந்தது. எஸ்எஸ். காலனி போலீசார் அவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago