தென்பெண்ணை ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் சாமாண்டப்பட்டி ஏரிக்கு தண்ணீர் விட வலியுறுத்தல் :

தென்பெண்ணை ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் சாமாண்டப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளி வட்டம் பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாமாண்டப்பட்டி, மேல்சாமாண்டப்பட்டி, பணங்காட்டுக் கொள்ளை, கோணையம் கொட்டாய், மோட்டுக்கொள்ளை, காராமூர், காமராஜ் நகர் மற்றும் பெரிய புளியம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

சாமாண்டப்பட்டி ஏரி தண்ணீரை நம்பி, 450 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏரி நீரின்றி வறண்டுள்ளதால், விளைநிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறிவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துவிட்டது. மேலும், மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். இங்கு ஆறு, கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லை.

எங்கள் ஊரில் இருந்து வாடமங்கலம் வழியாக தென்பெண்ணை ஆறு செல்கிறது. இது 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. இதேபோல் வாடமங்கலம் ஏரி 830 மீட்டர் தூரத்தில் உள்ளது. நீர் ஆதாரம் அருகே இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வாடமங்கலம் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் இருந்தோ அல்லது வாடமங்கலம் ஏரியின் உபரி நீரை சிறிய உறை கிணறு அமைத்து சூரிய மின்சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து மின்மோட்டாரை இயக்கி அங்கிருந்து சாமாண்டப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு சென்று ஏரியை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சாமாண்டப்பட்டி ஏரியின் கீழ் உள்ள 30 ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். விவசாயம் வளம் பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராம்ரெட்டி, சென்னைய நாயுடு, பாலகாந்தி, தீர்க்க சுந்தரம், சிவக்குமார், குமார், டிராக்டர் சங்க மாநிலத் தலைவர் மகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE