திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 980 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர் வகைகள் சேதமடைந்துள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் கனமழை கொட்டியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் தொடர்ச்சியாக மிதமான மழை அவ்வப்போது பெய்து வந்தது. நவம்பர் 18-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அதிக மழை பெய்தது. குறிப்பாக, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் மழையின் தீவிரமாக அதிகமாக காணப்பட்டது.
புல்லூர் தடுப்பணை நிரம்பி வாணியம்பாடி பாலாற்றில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. 4 நகராட்சிகளிலும் தாழ்வான குடியிருப்புப்பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
மழை பொழிவும் நின்று 3 நாட்கள் கடந்தும் மழைநீர் வடியாமல் உள்ளது. மழையால் வீடு இழந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 58 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 4,425 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.
நீர்நிலைகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறி வெள்ள நீர் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்ததால் 979.66 ஹெக்டேர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், சாமை, மரவள்ளிகிழங்கு, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
கனமழை காரணமாக திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம் சேதமடைந்தது. அதேபோல, பாம்பாறு - இருணாப்பட்டு பாலம், ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான 15 கி.மீ., சாலைகள் கனமழையால் சேதமடைந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago