தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா - சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத்திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நேற்று இரவு நிறைவு பெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. பின்னர் 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு, மகா தேரோட்டம் உட்பட பஞ்ச மூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் மூன்று நாட்களுக்கு நடைபெற்றது.

மேலும், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், கோயில் உள் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கரோனா தொற்று காரணமாக மாடவீதியில் நடைபெறவேண்டிய சுவாமிகளின் உற்சவங்கள், கோயிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் இரண்டாவது ஆண்டாக, இந்தாண்டும் நடைபெற்றது. இதற்கிடையில், 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத்திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நேற்று இரவு நிறைவு பெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிலையில் அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை 5-வது நாளாக நேற்று பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE