வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட - ராணுவ வீரரின் உடலை தேடும் பணியில் ஹெலிகாப்டர் :

By செய்திப்பிரிவு

விரிஞ்சிபுரம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீரரின் உடலை தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் அடுத்த மேல்விளாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (33). உத்தரகாண்ட் மாநிலம் லடாக்கில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர், 45 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து பணிக்கு செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேலூருக்கு கடந்த 18-ம் தேதி சென்றார்.

பின்னர், இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியபோது, விரிஞ்சிபுரம் பாலாறு தரைப்பாலத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவரது நிலை என்னவானது என தெரியவில்லை. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட அவரை தேடும் பணியில் ஏற்கெனவே தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். அதே நேரம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் மனோகரனின் உடலைக்கூட மீட்க முடியவில்லை.

இந்நிலையில், மனோகரனின் மனைவி திவ்யா தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருடன், இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலக கார் நிறுத்துமிடத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களிடம், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராணுவ வீரரின் உடலை தேடும் பணிக்காக ஹெலிகாப்டர் வரவழைக்கப்படுகிறது. தேடும் பணி முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், செய்தியாளர்களி டம் கூறும்போது, ‘‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை தேடுவதற்காக திருப்பதியில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் விங் கமாண்டர் சரண் தலைமையிலான குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் ராணுவ வீரர் வெள்ளத்தில் அடித்துச்சென்ற இடத்தில் இருந்து கல்பாக்கம் வரை இன்று (நவ.23) நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை பாலாற்றின் கரையோரங்களில் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர் கடைசியாக அணிந்திருந்த உடை, அவரது புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் விமானப்படை குழுவினருக்கு அனுப்பியுள்ளோம். தேடுதல் பணிக்குப் பிறகு அது தொடர்பான அறிக்கையை எங்களுக்கு அளிப்பார்கள்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE