ஒரு லட்சம் சித்த மூலிகைகள் மற்றும் 3 லட்சம் ஆயுர்வேத மூலிகைகளுக்கு இந்திய அரசு காப்புரிமை பெற்றுள்ளதாக தமிழக திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை தமிழ்நாடு ஹோட்டலில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் மூலம் பழங்குடியினருக்கான மூலிகை தாவர பயிற்சிப்பட்டறை நேற்று நடந்தது. பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ச.உதயகுமார் வரவேற்றார்.
பயிற்சியை மாவட்ட ஆட்சியர் (பொ) கீர்த்தி பிரியதர்ஷினி தொடங்கி வைத்து பேசினார். பழங்குடியினருக்கு, தமிழக திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.சிவராமன் பயிற்சி அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மலைத் தொடரில் உள்ள 6 பழங்குடியின மக்களிடம் சிறப்பான வாழ்வியல் உள்ளது. அதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த பயிற்சி பட்டறையின் நோக்கம். மத்திய அரசு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா உட்பட பாரம்பரிய மருத்துவ துறைகளை ஒருங்கிணைத்து, ஆயுஷ் துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த மருத்துவங்களில் ஆய்வுகள் நடத்தி, அவற்றின் பயனை உலகளாவிய அளவில் கொண்டு செல்கிறது.
தமிழக அரசும், இந்திய மருத்துவத் துறையினர் கீழ் மரபு சார்ந்த மருத்துவங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. மூலிகை தாவரங்களை இனம்காண்பதிலும், பாதுகாப்பதிலும் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சித்த மூலிகைகள், 3 லட்சம் ஆயுர்வேத மூலிகைகளுக்கு காப்புரிமையை மத்திய அரசே வாங்கியுள்ளது. பழங்குடியினரின் அனுபவங்களை அறிவு சொத்துரிமையாக மாற்ற பழங்குடியின ஆராய்ச்சி மையம் முயன்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago