சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த - சித்த மருத்துவ முகாமில் 1,670 பேருக்கு பரிசோதனை :

சேலம் மாநகராட்சி அலுவல கத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ சிறப்பு முகாமில் 1,670 பேர் பங்கேற்றனர்.

மழைக்காலத்தில் பரவக் கூடிய நோய்களான சளி, இருமல், காய்ச்சல், டெங்கு மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்க சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சித்த மருத்துவ சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

முகாம் மற்றும் கண் காட்சியை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தார். முகாமில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. மழைக்கால நோய்களுக்கான உணவு முறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன.

முகாமில், ஆண்கள் 932, பெண்கள் 572, குழந்தைகள் 166 என மொத்தம் 1,670 பேர் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். முன்னதாக சித்த மருத்துவ முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.

முகாமில், மாநகர நல அலுவலர் என்.யோகானந்த், மாநகர பொறியாளர் ஆர்.ரவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வி.கண்ணன், அரசு சித்த மருத்துவர்கள் பி.குமார், ஆ.ராமு, ஜெயக்குமார், ஆர்.வெற்றி வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்