வாலாஜாபாத் - அவளூர் சாலையில் - போக்குவரத்து துண்டிப்பால் : 10 கிராம மக்கள் அவதி :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் பாலாற்றில் ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் சென்றதால் வாலாஜாபாத் - அவளூர் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அவளூர், ஆசூர், கீழ்பேரமநல்லூர், கன்னடியன் குடிசை, அங்கம்பாக்கம், தம்மனூர், கம்பராஜபுரம், சித்தாத்தூர், இளையனார் வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழும் பொதுமக்கள் இந்த பாலத்தைக் கடந்துதான் வாலாஜாபாத் பகுதிக்கு வர வேண்டும்.

இதன் வழியாகத்தான் பெரும்புதூர் சிப்காட் பகுதிக்கும், ஒரகடம் பகுதிக்கும் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கும், அன்றாட தேவைகளுக்காகவும் வாலாஜாபாத் வர வேண்டும். இந்த பாலம் துண்டிக்கப்பட்டதால் 3 கிமீ கடந்துவர வேண்டிய தூரத்தை இவர்கள் களக்காட்டூர் வழியாக, காஞ்சிபுரம் வந்து வாலாஜாபாத் செல்கின்றனர்.

இந்த வழியாகவும் போதிய பேருந்து வசதி இல்லாததால் பலர்மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வர வேண்டியுள்ளது. துண்டிக்கப்பட்ட பாலத்தில் போக்குவரத்து சீராகும் வரை காஞ்சி வழியாக இந்த கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து இந்திய தேசியகிராம தொழிலாளர் சம்மேளனத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ஜி.சீனுவாசன் கூறும்போது, “ பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதால் விரைவில்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்