சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு - மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி :

By செய்திப்பிரிவு

மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கு நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான மொத்தம் உள்ள 26 பதவியிடங்களில் திமுக 17 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக இரண்டிலும், விசிக ஒன்றிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 22-ம் தேதி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளரான நல்லூர் கண்ணனுக்கும், மரக்காணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரான தயாளன் தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் மறைமுக தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே நல்லூர் கண்ணனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக தலைமை அறிவித்தது. இந்நிலையில் மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலை உடனே நடத்த உத்தரவிடக் கோரி நல்லூர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நவம்பர் மாதம் 22-ம் தேதி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து நேற்று மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் தயாளன் என்பவர் 14 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அர்ஜூனன் 12 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஒன்றிய குழுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்