அகரம் அரசுப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் - 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு 2 நாட்கள் விடுமுறை :

By செய்திப்பிரிவு

அகரம் அரசுப்பள்ளியில மழைநீர் அதிகளவில் தேங்கி உள்ளதால் பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியை ஒட்டியவாறு கால்வாய் செல்கிறது. நாகலேரி ஏரியில் நிரம்பி வெளியேறும் தண்ணீர், இக்கால்வாய் வழியாகச் சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளி வளாகத்திற்குள் தேங்கி நிற்கும். இதனால் வகுப்பறைக்குச் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கும் நிலை ஏற்படும்.

தற்போது பெய்த தொடர் கனமழையால் பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 9 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளியின் பின்புறம் வழியாக வந்து சென்றனர்.

இதனால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும் நேற்றும் மற்றும் இன்றும் (23-ம் தேதி) 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் பள்ளியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வினை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்