கேரளாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பெண்கள் கால்பந்துப் போட்டியில் பங் கேற்கும் தமிழக அணிக்கு நாமக்கல்லில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வரும் 28-ம் தேதி முதல் டிச., 9-ம் தேதி வரை 26-வது தேசிய அளவிலான பெண்கள் கால்பந்துப் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழக அணி சார்பில் விளையாட 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தொடர் மழை காரணமாக அப்பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 12-ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக அணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்பந்து பயிற்சியாளர் எஸ்.கோகிலா கூறியதாவது:
கேரளாவில் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வரும் 26-ம் தேதி வரை நாமக்கல்லில் பயிற்சி அளிக்கப்படும். இதில், 6 பேர் இந்திய கால்பந்து அணி சார்பில் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்றவர்கள். தமிழக அணியினர் சிறப்பாக பயிற்சி மேற்கொள்கின்றனர். நிச்சயம் கோப்பை வெல்வர், என்றார்.
தமிழக அணியில் இடம்பெற்றுள்ள இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையான கடலூரைச் சேர்ந்த சுமித்திரா காமராஜ் (27) கூறியதாவது:
வணிகவியலில் பி.எச்டி படித்து வருகிறேன். கரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது கேரளாவில் தேசிய அளவிலான போட்டி நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் அணியில் உள்ளனர். சிறப்பாக பயிற்சி எடுத்துள்ளோம். போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. இந்திய அணி சார்பில் தெற்காசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். கால்பந்தாட்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது. தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு, பயிற்சிகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை அரசு வழங்க வேண்டும். பலரும் ஆர்வமுடன் விளையாட வருவர், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago