வைகுண்டம் அருகே உள்ள மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில், குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: மூலக்கரை பகுதியில் 4.91 ஹெக்டேர் பரப்பில் தனியார் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குவாரி அமைக்கப்பட்டால் மூலக்கரை, வீரன் சுந்தரலிங்கம் நகர், அம்மானியா நகர், பேட்மா நகரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவர். கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து அழைத்துச் சென்ற போலீஸார்.தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் காந்தி மள்ளர் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை புஞ்சை தரிசு, பஞ்சமி நிலம் பல லட்சம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம் பகுதி மக்கள் ராஜ் என்பவர் தலைமையில் அளித்த மனுவில், “ எட்டயபுரம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே சில பேருந்துகள் வருவதில்லை. தூத்துக்குடி- மதுரை புறவழிச் சாலையிலேயே சென்று விடுகின்றன. அனைத்து பேருந்துகளும் எட்டயபுரம் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், “ ஏரல் வட்டம் கோவங்காடு ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் நகரில் அத்துமீறி நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி, இளைஞரை கடத்திச் சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மனு
பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் வேல்ராஜா தலைமையில் அளித்த மனுவில், “ எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த 5.03 ஏக்கர் இடத்தை அரசு வழங்கியது. இந்த இடத்தை பள்ளி நிர்வாகத்தினர் வணிக நோக்கோடு விற்பனை செய்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பொன் இசக்கி (30). தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், அங்கு பணியாற்றிய ஒருவருக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணம் வாங்கிய நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன் இசக்கியை மிரட்டினாராம்.முறப்பநாடு போலீஸில் அளித்த புகாரின் பேரில், அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜாமீனில் வந்த அவர் மீண்டும் மிரட்டுவதாக கூறி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொன் இசக்கி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார் தடுத்து அவரை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago