கெலவரப்பள்ளி அணையில் 2,900 கனஅடி நீர் திறப்பு - தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் தடை :

By செய்திப்பிரிவு

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 2,900 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திமலை, தும்கூர், பெங்களூரு ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 44.28 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் 40.67 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,663 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பது தொடர்வதால், கிருஷ்ணகிரி ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஓசூர் வட்டாட்சியர் மேற் பார்வையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

“தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால் கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், ஆற்றை கடந்து செல்லவும் முயற்சி செய்யக்கூடாது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும்” என தண்டோரா மூலம் தென்பெண்ணை ஆற்றங் கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 8,604 கனஅடியாக இருந்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 50.05 அடியாக உள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப் பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்