செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கத்தில் 108 கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.ரோஸ்நிர்மலா இத்திட்டம் குறித்த செயல்பாடுகளையும், முக்கியத்துவத்தையும் விளக்கினார். மேலும், கரோனா பாதிப்புக்குப் பிறகு பள்ளிகள் திறந்திருக்கும் இச்சூழலில் மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இடைநிற்றல் இல்லாத சூழலையும் உறுதிசெய்யும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டதாக கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் தாமோதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.சுரேஷ்குமார், ஆசிரியர் பயிற்றுநர் சா.கா.பாரதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.சுரேஷ்குமார் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 35 நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக 108 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்தத் திட்டம் தொடர்பாக எவ்வாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் இவர்கள் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முக்கிய சந்திப்புகளிலும் கலை நிகழ்ச்சி மூலம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago