தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநருமான ஷோபனா அறிவுறுத்தினார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து இரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர்கள் திவ்யதர்சினி (தருமபுரி) , ஜெயசந்திர பானு ரெட்டி (கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஷோபனா பேசியதாவது:
வரும் 01.01.2022 தேதியை மைய நாளாகக் கொண்டு 18-வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் கடந்த 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன. இதுதொடர்பாக, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையிலான புதிய வாக்காளர்களையும், இளம் வாக்காளர்களையும் சேர்க்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 1,479 வாக்குச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 13,606 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago