நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணை, ஏரி மற்றும் குட்டை நீரில் முழ்கி சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட சவுளூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா (40). கூலித் தொழிலாளியான இவர் விடுமுறை நாட்களில் கிருஷ்ணகிரி அணையின் நீர்தேக்கப் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இவர் மீன் பிடிக்க கிருஷ்ணகிரி அணைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று அணை பகுதிக்கு சென்று அவரது உறவினர்கள் பார்த்தபோது, மீன் பிடி வலையில் சிக்கி நீரில் முழ்கி ராஜப்பா உயிரிழந்தது தெரிந்தது. இருப்பினும் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் வட்டம் எமக்கல்நத்தம் அடுத்த சாலிநாயனப்பள்ளியைச் சேர்ந்த வடிவேலன் என்பவரது மகன் அபினாஷ் (6). இவர் எமக்கல்நத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அபினாஷ் அப்பகுதியில் உள்ள குட்டை ஒன்றில் கால் கழுவ சென்றபோது, தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதே போல, போச்சம்பள்ளி வட்டம் ஒட்டப்பட்டி அருகே உள்ள நாகனூரைச் சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளியான இவர் ஒட்டப்பட்டி தொன்னுகுண்டாபுரம் ஏரிக்கரை அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார். இதில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுதொடர் பாக மத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்