அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் - 1 லட்சம் கன அடி நீர் செல்வதால் கண்காணிப்பு தீவிரம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வழியாக கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1.02 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால், கரையோரத்தில் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் அமராவதி ஆறு மூலம் கலப்பதாலும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 69,641 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 23,970 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி, கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரை பகுதிக்கு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் நேற்று மாலை நிலவரப்படி 1,02,000 கன அடி நீர்வரத்து இருந்தது.

இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால், இருபுறமும் கரையோரம் உள்ள கிராமங்களில் பொதுமக்கள், கால்நடைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுறுத்தல்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் உச்சபட்சமாக 2005-ம் ஆண்டு விநாடிக்கு 5.16 லட்சம் கன அடியும், தொடர்ந்து 2018-ம் ஆண்டு 2.12 லட்சம் கன அடியும் தண்ணீர் சென்றுள்ளது. இதையடுத்து, தற்போது 1 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் செல்வதால், பொதுப்பணித் துறையின் அனைத்து நிலை அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டு, கரையோரங்களில் இரவு பகலாக கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும், அணைக்கரையில் அதிகளவில் முதலைகள் உள்ளன. இவை, ஆற்றில் அதிக வெள்ளம் செல்லும்போது கரைகளில் ஏறி கிராமங்களுக்கு வரும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:

கொள்ளிடத்தில் செல்லும் தண்ணீரின் அளவு 1 லட்சம் கன அடியை தாண்டியுள்ள நிலையில், இந்த அளவு நாளை(இன்று) மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே, தாழ்வான பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கரைகளில் உடைப்பு ஏதும் ஏற்படாத வகையில், மணல் மூட்டைகள், சவுக்கு மரங்கள் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்