டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என திருப்பத்துார் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " திருப்பத்துார் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான இடுபொருட்கள் போதிய அளவில் உரிய காலத்தில் கிடைக்க மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் எந்த பயிர் சாகுபடி செய்தாலும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அதன்படி ரசாயன உரங்களோடு இயற்கை உரங்கள். உயிர் உரங்கள், நுண்ணுட்ட உரக்கலவைகள் மற்றும் கம்போஸ்ட் உரங்களையும் பயிர்களுக்கு சேர்த்து வழங்க வேண்டும்.
இதனால் ரசாயன உரங்களின் தேவை குறைக்கப்பட்டு பயிர் சாகுபடி செலவினங்களும் குறைக்கப்படுகிறது. மேலும், பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கப் பெறுவதோடு மகசூலும் அதிகரிக்க வழிவகை செய்கிறது.
தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரக்கலவைகள் மாவட்டத்தின் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி உரிய ஆவணங்களின் அடிப்படையில் இவற்றை பெற்று பயன்பெறலாம். மேலும், விவசாயிகள் மண் பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மண்வள அட்டையின் பரிந்துரைக்கேற்ப உரமிட வேண்டும். மணி சத்தினை வழங்க கூடிய டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் கூட்டு உரங்களை (காம்ப்ளக்ஸ்) விவசாயிகள் பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளலாம்.
திருப்பத்துார் மாவட்டத்தில் பெரும்பாலும் மண்ணின் மணிச்சத்து மத்திய அளவில் உள்ளது. எனவே விவசாயிகள் அம்மோனியம் பாஸ்பேட் (20:20:0:13), அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட் (16:20:0:13), வேப்பம் புண்ணாக்கு முலாம் பூசிய அமோனியம் பாஸ்பேட் (28:28:0), என்.பி.கே. காம்ப்ளக்ஸ் (17:17:17), என்.பி.கே காம்ப்ளக்ஸ் (10:26:26), சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்களை பயன்படுத்தலாம்.
இந்த உரங்களில் உள்ள மணிச்சத்து நமது மண்ணின் தேவைக்கு நிகர் செய்யும் அளவிலேயே உள்ளது. எனவே. விவசாயிகள் டி.ஏ.பி உரம் கிடைக்க கால தாமதம் ஏற்பட்டாலுதம், மாற்று உரங்களை வாங்கி பயன்பெற வேண்டும்’’. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago