வட கிழக்கு பருவமழை காரணமாக பாலாறு மற்றும் பொன்னை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கழிஞ்சூர், காட்பாடி ஏரிகள் நிரம்பி உபரி நீர் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மதிநகர், பாலாஜி நகர், அண்ணாமலை நகர், கணபதி நகர், பேங்க் நகர், கோபாலபுரம், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக சிரமத்துக்குள்ளாகி யுள்ளனர். அதேபோல, வி.ஜி.ராவ் நகரில் உள்ள 5 செக்டார்களும், பாரதி நகர், பாரதி நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளது.
காட்பாடி அடுத்த சேர்க்காடு பெரிய ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறி வரும் உபரி நீர் அருகயுள்ள சின்ன ஏரிக்கு செல்கிறது. நீர் செல்லும் வழியில் இருக்கக்கூடிய கண்டிப்பேடு தரைப்பாலம் நேற்று முன்தினம் நீரில் மூழ்கியது.
காட்பாடியில் இருந்து சேர்க் காடு செல்லும் பகுதிக்கு இடைபட்ட கண்டிப்பேடு சாலையில் ஏரி நீர் மற்றும் கால்வாய் நீர் கலந்து ஓடுவதால் அங்கு போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேர்காட்டில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற அரசு நகரப்பேருந்து சாலையில் பாய்ந்தோடும் மழைநீரில் நேற்று காலை சிக்கியது .
மழைநீரில் சிக்கிய பேருந்து தண்ணீரின் நடுப்பகுதியில் நின்றது. பேருந்து ஓட்டுநர் போராடியும் பேருந்தை இயக்க முடியவில்லை. இதையடுத்து, பயணிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கி பேருந்தை தள்ளி விட்டனர். சிறிது நேரம் கழித்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago