திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் 2021அக்டோபர் வரை 166 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் (சி.எஸ்.இ.டி.) இயக்குநர் நம்பி, சைல்டு லைன் அமைப்பின் திருப்பூர் ஒருங்கிணைப்பாளர்கள் கதிர்வேல், தினேஷ், பாஸ்கர், மரியாலயாவின் கரோலினா ஆகியோர் கூறினர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
குழந்தைகள் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைல்டு லைன் அமைப்பு மூலம் இலவச எண் ‘1098’ கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021, அக்டோபர் மாதம் வரை சைல்டுலைன் அமைப்பின் இலவச எண்ணுக்கு 1,433 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 1,314 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 166 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை தொழிலாளர்கள் 142 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பாலியல் தொல்லையை சந்தித்த 103 குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பிச்சை எடுத்த 78 குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்த 51 குழந்தைகள் கண்டறியப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல கரோனாவால் பெற்றோரை இழந்த 483குழந்தைகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 19 மாதங்களில் மட்டும் சைல்டுலைன் அமைப்புக்கு 1,433 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 1,314அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago