கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு - பொங்கும் ரசாயன நுரையால் சுற்றுச்சூழல் பாதிப்பு :

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3060 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் கிராமமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகனமழை பெய்து வருவதால் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2,563 கன அடியாக அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போது அணையில் 41.33 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 2,563 கனஅடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில்இருந்து விநாடிக்கு 3,060 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஓசூர் வட்டாட்சியர் மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக தண்டோரா போடப்பட்டு, தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் ஆற்றில் குளிக்கவும்,துணி துவைக்கவும், ஆற்றை கடந்து செல்லவும் முயற்சி செய்யக்கூடாது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராமமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரசாயன வெண்நுரை

கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திமலையில் உருவாகும்தென்பெண்ணை ஆறு, பெங்களூரு ஊரகம் மற்றும் பெங்களூரு நகரப்பகுதி வழியாக ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது. இதில் பெங்களூரு நகரப் பகுதியை கடந்து வரும்போது தென்பெண்ணையாற்றில் அங்குள்ள தொழிற் சாலை களின் ரசாயன கழிவுநீர் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பதால் சுத்தமான மழைநீர் அசுத்தமடைந்த நிலையில் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறும்போது பொங்கும் வெண்மையான நுரையுடன் ஆற்று நீர் செல்கிறது. துர்நாற்றம் வீசும் ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE