மேற்குவங்க சகோதரர்களை கடத்திய 4 பேர் காவேரிப்பட்டணத்தில் கைது :

By செய்திப்பிரிவு

ரூ.25 லட்சம் கேட்டு மேற்கு வங்க சகோதரர்களை கடத்திய 4 பேரை காவேரிப்பட்டணம் போலீ ஸார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பர்கானா சவுகத் ஜிங்கிசாட் பகுதியைச் சேர்ந்தவர் ஷாரூக்கான் (24). கோவை பீளமேடு சக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இவரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் சபரிநாதன் (21), கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வந்தார். இதற்காக மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார். சபரிநாதன் கூடுதல் சம்பளம் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி திருப்பூரில் சிக்கண்ணா கல்லூரி சாலை யில் ஷாருக்கான், தனது சகோதரர் சாஜத் கானுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்களை வழிமறித்த சபரிநாதன் தரப்பினர், காரில் கடத்தி வந்து, காவேரிப் பட்டணம் தாளமடுவு கிராமத்தில் ஏரிக்கரையில் அடைத்து வைத்தனர்.

இதையடுத்து சபரிநாதன், ரூ.25 லட்சம் கேட்டு ஷாருக்கானின் மனைவி மோனிஷாவுக்கு போன் செய்து மிரட்டியதை தொடர்ந்து தன்னிடம் ரூ.55 ஆயிரம் மட்டும் தான் உள்ளது என அவர் தெரிவித்தார். சபரிநாதன் கூறியபடி ரூ.55 ஆயிரம் பணத்தை திருப்பூரில் அபிஷேக் என்பவரிடம் மோனிஷா கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய ஷாரூக்கான், அவரது சகோதரர் சாஜத்கான் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக எஸ்ஐ அறிவழகன் வழக்குப்பதிவு செய்து பாரூர் கீழ்குப்பம் சபரிநாதன் (21), அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் அஜய் பரத் (23), தனியார் நிறுவன ஊழியர் மோகனகுமார் (24), ஓசூர் ராயக்கோட்டை சாலை பிரம்மா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (25) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள திருச்சி துறையூரைச் சேர்ந்த அரவிந்தன், தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆனந்தன், பாரூர் கீழ்குப்பம் அபிஷேக், பாரூர் பனங்காட்டூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சக்தி ஆகிய 4 பேரையும் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்