உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ நிறுவன ஊழியர்கள், ஒரு கிலோ மீட்டருக்கு உணவு டெலிவரி செய்ய ரூ.10-க்கு மேல் வழங்கி வந்த நிலையில், தற்போது ரூ.6-மட்டுமே வழங்கி வருவதைக் கண்டித்தும், ஒரு ஆர்டருக்கு சரியான சம்பளம் வழங்க கோரியும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில் ஊரப்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரையுள்ள 100-க்கும்மேற்பட்ட சொமேட்டோ நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.வேலன், வழக்கறிஞர் மு.முனிச்செல்வம், தமுஎகசவின் சுந்தர்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து சொமேட்டோ நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: உணவு டெலிவரி செய்ய ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்கி வந்தனர். கரோனாவை காரணம் காட்டி அதை 6 ரூபாயாக குறைத்து விட்டனர். தற்போது பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய பத்து ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும். ஊழியர்களின் செல்போனை ஒட்டுக் கேட்டு அதை வைத்து ஊழியர்களை நிர்வாகம் மிரட்டுவதைத் தடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் நிறுவன அதிகாரிகளை தட்டிக் கேட்கும்போது 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர்.
இவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago