கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் - வெள்ளிவாயல் உட்பட 3 கிராமங்கள் தத்தளிப்பு : பாதிக்கப்பட்டோருக்கு அமைச்சர் நாசர் நிவாரண உதவி வழங்கினார்

By செய்திப்பிரிவு

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சோழவரத்தை அடுத்த வெள்ளிவாயல் உள்ளிட்ட 3 கிராமங்களில் மழைவெள்ளம் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன், ஆந்திராவில் பெய்யும்கனமழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 35,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இதனால், சோழவரத்தை அடுத்த வெள்ளிவாயல் , வழுதுகைமேடு மற்றும் பெரிய மடியூர் கிராமத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் தேசிய மீட்பு படையினர் 22 பேரும், மாநில பேரிடர் மீட்புப் படையினர் 31 பேரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிவாயல் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளநீர் புகுந்துள்ளதால், அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வெள்ளிவாயல், விச்சூர் ஆகிய கிராமங்களில் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல், வழுதுகைமேடு, பெரிய மடியூர் கிராமங்களில் உள்ள கொசஸ்தலை ஆற்றாங்கரையில் உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பொதுப்பணித் துறை மூலம் மணல் மூட்டைகள் அடுக்கி பாதுகாக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் சந்தித்து, அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், போர்வை, தார்பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

பின்னர், அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆந்திராவில் உள்ள நகரி, அம்மப்பள்ளி ஆகிய அணைகளில் இருந்து நீர்வரத்து அதிக அளவில் வந்ததன் காரணமாகவும், எதிர்பார்த்ததைவிட அதிக அளவு மழை பெய்ததாலும் கொசஸ்தலை, கூவம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வர ஆரம்பித்தது.

இதனால், வெள்ளிவாயல், விச்சூர் கிராமங்கள் நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான விவசாய நிலங்கள் மற்றும் மூழ்கடிக்கப்பட்டுள்ள பயிர்களை முற்றிலுமாக ஆய்வு செய்த பிறகு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்