கனமழையின் தாக்கம் தணிந்ததால் - தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து குறைந்தது :

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேற்று பிற்பகல் முதல் விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள பெருக்கானது, “வெண்ணெய் உருகும் முன்னே பெண்ணை பெருகும்” எனும் பழமொழியை உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிளை ஆறுகளில் பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணை யாற்றுக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது.

இதனால், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகேகட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது. இதன் தாக்கம் நேற்று சற்று தணிந்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, அணையில் இருந்து விநாடிக்கு 44,561 கனஅடி தண்ணீரும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 29,119 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

திட்டமிடப்படாமல் மழைக்காலத்தில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு பணி காரணமாக சாத்தனூர் அணையில் உள்ள 20 ஷட்டர்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால், 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையில் 99 அடி மட்டுமே சேமிக்க முடிகிறது. எனவே, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், தென்பெண்ணையாற்றில் கரைபுரண்டோடி வங்கக் கடலில் கலக்கிறது. இதனால் தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜவ்வாதுமலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 65 மி.மீ., மழை பெய்துள்ளது. இதற்கிடையில் மழையின் தாக்கம் நேற்று பகலில் சற்று தணிந்ததால், நீர்வரத்து குறைந்துள்ளது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, குப்பநத்தம் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், செண்பகத் தோப்பு அணையில் இருந்து விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீரும், மிருகண்டா நதி அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப் பட்டு வருகிறது.

இதனால் செய்யாறு, கமண்டல நாகநதி மற்றும் கிளை நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவை சேதமடைந் துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்