குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் - 1,200 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம் எப்போது? : விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By வ.செந்தில்குமார்

குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றின் கரையோரத்தில் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள 1,200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளான கவுன்டன்யா, பொன்னை உள்ளிட்ட ஆறுகளில் உச்சபட்ச அளவாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தில் பாலாற்றுக்கு அடுத்த படியாக மிக முக்கியமான நீராதாரமாக கவுன்டன்யா மகாநதி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி சுமார் 80 கி.மீ. பயணித்து வேப்பூர் அருகே பாலாற்றுடன் கலக்கிறது.

தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து கடந்த ஆண்டு ‘நிவர்’ புயல் நேரத்தில் பதிவு செய்யப்படாத அளவாக 10,997 கனஅடி நீர் வெளியேறி கவுன்டன்யா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. குடியாத்தம் காமராஜர் பாலத்தை தொட்டபடி சென்ற வெள்ளத்தால் நகரின் கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது.

குடியாத்தம் நகரில் மட்டும் கவுன்டன்யா ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பாவோடும் தோப்பு பகுதியில் இருந்து லட்சுமி திரையரங்கம் வரை சுமார் 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடி யிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர்பான இறுதிகட்ட நடவடிக்கை மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மீண்டும் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக மோர்தானா அணை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகபட்ச அளவாக 16,389 கன அடி நீர் வெளியேறியது. அதேபோல், ஆர்.கொல்லப்பல்லி கொட்டாறு மற்றும் ஜிட்டப்பள்ளி பகுதியில் உள்ள கானாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் கவுன்டன்யா ஆற்றில் கலந்தது. இதன் காரணமாக காமராஜர் பாலத்தை தொட்டபடி கவுன்டன்யா ஆற்றில் சுமார் 20 ஆயிரம் கன அடிக்கு வெள்ளநீர் கரைபுரண்டோடியது. கடந்த 2 நாட்களாக கவுன்டன்யா ஆற்றில் 15 ஆயிரம் கன அடிக்கும் குறையாமல் வெள்ளம் ஓடுவதால் ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் வெள்ளத்தால் கரையோர ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு உத்தர விட்டால் வருவாய்த்துறையினர் உடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஆற்றில் வெள்ளம் செல்வதால் கரைகள் சற்று அகலமாகவும் ஆழமாகவும் மாறியுள்ளது. இதன் காரணமாகவே நேற்று முன்தினம் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளத்தை ஆறு தாக்குப்பிடித்துள்ளது. இல்லாவிட்டால் கரையோர பகுதிகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும்.

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் இன்னும் 5 ஆயிரம் கன அடி வெள்ளநீர் ஆற்றில் சுலபமாக ஓடும். தொடர் மழையால் கவுன்டன்யா ஆற்றை நம்பியுள்ள பல ஏரிகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.

தற்போது வரும் வெள்ளநீரை தேக்கி வைக்க முடியாததால் ஆற்றில் நேரடியாக விடப்பட்டு வெள்ளம் அதிகமாக தெரிகிறது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்