அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகாதீபம் : திருச்செங்கோடு சுற்றுவட்டார பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை உச்சியில், பாண்டீஸ்வரர் கோயில் சிகரத்தில், செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை உச்சியில், பாண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் எதிரே உள்ள செங்குத்தான பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு மகா தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் புதிதாக செய்யப்பட்ட 90 கிலோ செப்புக் கொப்பரையில், 600 கிலோ பசுநெய், 300 கிலோ பருத்தி நூல், 100 மீட்டர் காடா துணி மற்றும் 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் குமரவேல், பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சதா சிவானந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் தங்கமணி மகன் தரணிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி ஆகியோர் மகா தீபத்தை ஏற்றி வைத்தனர்.

முன்னதாக மகாதீப பொறுப்பாளர்கள் இரண்டு மூங்கில்களை பயன்படுத்தி செப்புக் கொப்பரையை, செங்குத்தான மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். பசு நெய் மற்றும் பருத்தி மூட்டைகளை சிவனடியார்கள் தலைச்சுமையாக வரடிக்கல் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். குளிர்காற்றையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் மகாதீப தரிசனம் செய்தனர்.

நேற்று முன் தினம் ஏற்றி வைக்கப்பட்ட மகாதீபம், ஐந்து நாட்களுக்கு பிரகாசிக்கும் என்றும், திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தில், 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு தீப ஒளி தெரியும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர். தீபதரிசனத்தைக் கண்ட பக்தர்கள், ஆங்காங்கே கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்