தமிழ்நாடு எல்லை காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில், 10 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
இந்தியாவில் 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளில் தற்போது சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 52 பேர்.
இந்நிலையில், தமிழ்நாடு எல்லை காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 52 எல்லைக் காவலர்களில் 10 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
மற்ற 42 பேருக்கு அவர்களது வீடுகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறையினர் நேரில் சென்று காசோலை வழங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நிகழ்வில், மாவட்டஅளவில் ஆட்சி மொழித் திட்டசெயலாக்கத்தில் சிறந்து விளங்கியமாவட்ட செய்தி மக்கள் தொடர்புஅலுவலகம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அலுவலகம் ஆகியவற்றுக்கு கேடயங்களை, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டினார்.
நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சந்தான லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago