கூட்டுறவு வங்கியில் நகைகளை திருப்பித்தர வேண்டும் : விருதுநகர் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகேயுள்ள டி.வேப்பங்குளம், திருச்சுழி அருகே உள்ள பட்டமங்களம், அழகாபுரி ஆகிய 3 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்கி யதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து, 2016-ம் ஆண்டில் தணிக்கை நடத்தப்பட்டது.

அப்போது, அடகு வைக்கப்பட்ட நகைகள் திருப்பி வழங்கப்பட்டதாக கணக்கு எழுதி அந்த நகைகளை வேறு வங்கிகளில் மறு அடகு வைத்தும், கூட்டுறவு சங்கத்தில் நகைகளே இல்லாததும் தெரிய வந்தது. அழகாபுரி கூட்டுறவு சங்கத்தில் மட்டும் ரூ.1.81 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் முனியாண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அழகாபுரி கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து ஏமாற்றம் அடைந்து தங்கள் நகைகளை இழந்த பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். வட்டியுடன் அசலை செலுத்தியபோதும் நகையை திருப்ப முடியவில்லை என தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நகைகள் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்