பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை யொட்டி, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் திட்ட விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, விழிப்புணர்வு பயிலரங்கை தொடங்கிவைத்து, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
குழந்தைகளின் பாதுகாப்பை தினந்தோறும் உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் இந்தப் பயிலரங்கு, முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் நடத்தப்படும். இதில், குழந்தை களின் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும்.
குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங் கிய சுவரொட்டிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, வகுப்பறைகளில் ஒட்டப்படும். மேலும், குழந்தைகள் தங்களின் புகார்களை தெரிவிப்பதற்கான உதவி எண் 14417-ஐ பள்ளித் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். இந்த உதவி எண்ணை பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, துளிர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட மேலாளர் நான்சி வெரோனிகா தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago