கூட்டுறவு சங்கங்கள் மீட்கப்பட்டு வருகின்றன : கனிமொழி எம்.பி. நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் 68-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 2,030 பயனாளிகளுக்கு ரூ.13.01 கோடி கடனுதவிகளை வழங்கினர்.

சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள், நியாய விலைக் கடைகள், பொது சேவை மையங்களுக்கு விருதுகள் மற்றும் கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி கனிமொழி எம்.பி. பேசும்போது, “ திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவுத் துறையில் உள்ள அவலங்கள் சரி செய்யப்பட்டு, மீண்டும் விவசாயிகளுக்காக, மக்களுக்காக கூட்டுறவு சங்கங்கள் பயன்படும் வகையில் மாற்றப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.

அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, “தமிழகம் முழுவதும் 300 கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், தூத்துக்குடியில் கூட்டுறவு மேலாண்மைபயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ச.லீ.சிவகாமி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், கூட்டுறவு துணைப் பதிவாளர்கள், ஜெயசீலன், ரவீந்திரன், பாலகிருஷ்ணன், சுப்புராஜ், மாரியப்பன், சந்திரா, அமுதா கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து விவசாயிகள் அதை எதிர்த்து போராடி வருகின்றனர். திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மத்திய அரசுவிவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இது தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. நம் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து போராடினால் நிச்சயம் அவற்றை திரும்ப பெற முடியும் என்பதை இந்த வெற்றி உறுதி செய்துள்ளது. இதேபோன்று நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்