திருப்பூர் மாநகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : பல ஆண்டு பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி பொதுமக்கள் மறியல்

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதி பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

திருப்பூர் பொம்மநாயக்கன் பாளையம் வாவிபாளையம் பிரதான சாலையில் இருக்கக்கூடிய பாலன் நகர், பி. ஆர். ஜி. கார்டன், வைஷ்ணவி கார்டன் உள்ளிட்ட சுமார் 8-க்கும் மேற்பட்ட தெருக்களில் நேற்றுமுன் தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக, முழங்கால் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தது. தார்சாலை இல்லாததால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, கைக்குழந்தைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகாலமாக இப்பிரச்சினை இருப்பதாகக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, அனுப்பர்பாளையம் போலீஸார் சமாதானப்படுத்தினர்.

திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதி கருப்பராயன் நகரில், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அவர்களது வீடுகளில் இருந்த கட்டில் மற்றும் சேர் உள்ளிட்டவை மீது அமர்ந்திருந்தனர். இரவில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தூக்கமின்றி தத்தளித்தனர். வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீர் வெகுநேரமாகியும் வடியாமல் இருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள குட்டையின் பக்கவாட்டு சுவர் கனமழைக்கு உடைந்தது. சிறுபூலுவபட்டி ஏடி காலனியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மண் வீடு மழையால் இடிந்தது. தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் 3 மண் வீடுகள் இடிந்துவிழுந்தன. திருப்பூர் ஊத்துக்குளி கூட்செட் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கார் ஒன்றும் சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கியது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை நோக்கி மழைநீர் மற்றும் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE