அவிநாசிபாளையம் பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவிநாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழைநீர் நள்ளிரவில் சூழ்ந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தத்தளித்தனர். வீடுகளில் குழந்தைகள் பலரும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதையடுத்து சம்பவ இடத்துகு வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத்துறையினர், வீடுகளில் சிக்கியிருந்த சங்கர், பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி(12), ஸ்ரீ ஹரி(9) மற்றும் மற்றொரு குடும்பமான கார்த்திக், கார்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம் பிரவீன்(8),பிரனிதா(6),தர்ஷீத்(2) என ரப்பர் படகு மூலம் மீட்டனர். பாலாஜி நகர் உட்பட அவிநாசிபாளையத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியே நேற்று வெள்ளக்காடானது. இடுப்பளவு தண்ணீர் பல்வேறு பகுதிகளில் நின்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களை கவுண்டன்புதூர் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதேபோல் கோவை- திருச்சி சாலையில் வெள்ளநீர் வடியாமல் தொடர்ந்து வெளியேறிகொண்டிருந்ததால், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
அமராவதியில் நீர்திறப்பு
அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், நேற்று அதிகாலை நேரத்தில் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் 88 அடிவரை நீர் நிரம்பியுள்ள நிலையில், திடீரென நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 6 மதகுகள் வழியாக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கரையோர கிராமப்பகுதி மக்கள் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago