திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. ஒரே நாளில் குண்டடம் பகுதியில் 200 மிமீ மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. திருப்பூர் மாநகரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாவட்டத்தில் வறட்சி பகுதியான குண்டடம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. குண்டடம் பகுதியில் ஒரே நாளில் 200 மி.மீ மழை பதிவானது.
சூரியநல்லூர், ஜோதியம்பட்டி பகுதிகளில் சோளம் மற்றும் மக்காச்சோளம் தோட்டங்களில் மழைநீர் புகுந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளாக இப்படியொரு மழையை நாங்கள் பார்த்ததில்லை. நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் சோளம், மக்காச்சோளம், தக்காளி மற்றும் வெங்காயம் என 300 முதல் 400 ஏக்கர் நிலங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.
உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் உடுமலையை அடுத்துள்ள அணிக்கடவு வாகத்தொழுவு கிராமத்தை இணைக்கும்தரைப்பாலத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், தாராபுரம் அருகிலுள்ள உப்பாறு அணைக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக, கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்வெள்ளநீரானது தரைபாலத்திற்குமேல் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மினிஆட்டோவில் வந்த சின்னச்சாமி(75) மற்றும் அவரது மகன் செல்வகுமார்(25) தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது வாகனம் பழுதடைந்தது. இதையடுத்து இருவரும் வெள்ளநீரில் இழுத்து செல்லப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின், செல்வகுமார் அருகிலிருந்த மரக்களையை பிடித்து உயிர் தப்பினார். சின்னச்சாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். செல்வகுமார் மரக்கிளையை பிடித்தபடி, தண்ணீரில் தத்தளிப்பதை அறிந்த ஊர் மக்கள் உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் செல்வகுமாரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். நீரில் மூழ்கி இறந்த நிலையில் சின்னச்சாமியின் சடலத்தை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago