திருப்பூர் மாநகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : அவிநாசிபாளையத்தில் ரப்பர் படகு மூலம் பொதுமக்கள் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

திருப்பூரில் பெய்த கனமழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

திருப்பூர் பொம்மநாயக்கன் பாளையம் வாவிபாளையம் பிரதான சாலையில் இருக்கக்கூடிய பாலன் நகர், பி. ஆர். ஜி. கார்டன், வைஷ்ணவி கார்டன் உள்ளிட்ட சுமார் 8-க்கும் மேற்பட்ட தெருக்களில் நேற்றுமுன் தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக, முழங்கால் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தது. தார்சாலை இல்லாததால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, கைக்குழந்தைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதி கருப்பராயன் நகரில், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அவர்களது வீடுகளில் இருந்த கட்டில் மற்றும் சேர் உள்ளிட்டவை மீது அமர்ந்திருந்தனர். இரவில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தூக்கமின்றி தத்தளித்தனர். வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீர் வெகுநேரமாகியும் வடியாமல் இருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள குட்டையின் பக்கவாட்டு சுவர் கனமழைக்கு உடைந்தது. சிறுபூலுவபட்டி ஏடி காலனியில் மூர்த்திஎன்பவருக்கு சொந்தமான மண் வீடு மழையால் இடிந்தது. தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் 3 மண் வீடுகள் இடிந்துவிழுந்தன. திருப்பூர் ஊத்துக்குளி கூட்செட் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கார் ஒன்றும்சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கியது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை நோக்கி மழைநீர் மற்றும் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பல்லடம் சுற்றுவட்டார பகுதி களான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவிநாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழைநீர் நள்ளிரவில் சூழ்ந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். வீடுகளில் குழந்தைகள் பலரும் அவதிக்கு ஆளாகினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத்துறையினர், வீடுகளில் சிக்கியிருந்த இரண்டு குடும்பத்தினரை ரப்பர் படகு மூலம் மீட்டனர். பாலாஜி நகர் உட்பட அவிநாசிபாளையத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியே நேற்றுவெள்ளக்காடானது.

அமராவதியில் நீர்திறப்பு

அமராவதி அணைக்கு நேற்று அதிகாலை நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்தஉயரமான 90 அடியில் 88 அடிவரை நீர் நிரம்பியுள்ள நிலையில், திடீரென நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 6 மதகுகள் வழியாக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்