வடகிழக்குப் பருவமழைக் காலம் முடியும் வரை சேலத்தில் புதிய பணிகளுக்கு சாலைகளில் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக, சேலத்தில் மழை நீர் தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சேலத்தில் பல்வேறு பணிகளுக்கு சாலைகள் தோண்டப்பட்ட பகுதிகள் சேரும், சகதியுமாக மாறியுள்ளது. எனவே, மழைக்காலம் முடியும் வரை புதிய பணிகளுக்கு சாலைகளை தோண்டுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
சேலம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாக்கடை கால்வாய் கட்டும் பணி, பாதாள சாக்கடை திட்டப்பணி உள்ளிட்ட பணிகளுக்காக, சாலைகள், வீதிகள் தோண்டப் பட்டுள்ளது.
குறிப்பாக, பொன்னம்மாபேட்டை புதுத்தெருவில் பாதாள சாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மழையால் இந்த தெருவில் மழை நீர் குளம்போல தேங்கி இருப்பதோடு, தெரு முழுவதும் சேரும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமப்படும் நிலையுள்ளது.
இதேபோல, அம்மாப்பேட்டை மெயின்ரோடு அருகேயுள்ள திரு.வி.க. சாலை, சவுராஷ்டிரா பள்ளி ஆகிய இடங்களில் சாக்கடை கால்வாய் கட்டும் பணியால் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சேலம் டவுன் ரயில் நிலையம் சாலையில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், சாலை முழுவதும் சேரும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால், சாலைகளில் நடமாட முடியாமலும், வழுக்கி விழும் அவலமும் ஏற்படுகிறது.
மேலும், மழையின்போது, வீதிகள், சாலைகளில் உள்ள பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கீழே விழுந்து செல்லும் நிலையுள்ளது. எனவே, மழைக்காலம் முடியும் வரை புதிய பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும், ஏற்கெனவே நடைபெற்று வரும் பணிகளைபோர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago