தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கோபிநாத் என்ற கோபி. இவரை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் 3 வாரம் ஜாமீன் வழங்கியது.
3 வாரத்துக்கு பிறகு சரண் அடையவும் உத்தரவிட்டது. கோபிநாத் சரண் அடையாததால் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் இரு வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார்.
அதில், விபத்தில் சிக்கியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 2 மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை எனக் கூறியிருந்தார். அவர் மனுவுடன் தாக்கல் செய்த மருத்துவ சான்றிதழ் பொய்யானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சி.பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோபிநாத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், மருத்துவர் பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டியது மருத்துவக் கவுன்சில் கடமையாகும்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago