பாம்பாறு அணைப் பகுதியில் உள்ள 37 இலங்கைத் தமிழர் களுக்கு ரூ.1.11 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரையில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்எல்ஏ-க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று ரூ.10.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியது:
தமிழகத்தில் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்குப் பதிலாக ரூ.142 கோடியில் புதிதாக 3,510 வீடுகள் கட்டப்படுகிறது. அந்த வரிசையில் ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 37 பயனாளிகளுக்கு ரூ.1.11 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும். இவ்வாறு இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் சதீஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், முன்னாள் எம்பி சுகவனம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மணிமேகலை, தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர் முத்துசாமி, ஊத்தங்கரை ஒன்றியக் குழு தலைவர் உஷாராணி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சத்தியவாணி, வட்டாட்சியர்கள் தெய்வநாயகி, சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago