திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் பணியாளர்கள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இதர பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கோயிலில் நவம்பர் மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணிகோயில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமையில் நேற்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கோயில் பணியாளர்கள் இதில் ஈடுப்பட்டனர்.
இதற்கிடையே கோயில் வசூல் எழுத்தர்கள் ஆறுமுகராஜ், சண்முகம் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்ட பணியாளர்கள் பகல் 12 மணியளவில் அங்கிருந்து வெளியேறி கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். முதுநிலை கோயில் பணியாளர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள் மற்றும் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், கோயில் இணை ஆணையர் குமரதுரையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உண்டியல் எண்ணும் பணி முடிந்ததும் இது தொடர்பாக பேசிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு கோயில் பணியாளர்கள் மீண்டும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். மாலை 4 மணியளவில் உண்டியல் எண்ணும் பணி முடிவடைந்ததும் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு மீண்டும் பணியாளர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோயில் இணைஆணையரிடம் கேட்ட போது, ‘‘அலுவலக உத்தரவுக்கு கீழ்படியாததால் இரு பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அலுவலக விதிக்கு மாறாக ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைக்காமல் சென்றுவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையே போராட்டத் தில் ஈடுபட்ட கோயில் பணியாளர்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் சுவாமிநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே நேரம் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டமும் தொடர்ந்தது. இருவர் மீதான தற்காலிக பணிநீக்க உத்தரவை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago