வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது; 74 பவுன் நகைகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் வீடுகளில் பூட்டை உடைத்து திருடும் அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேரை தஞ்சாவூர் மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 74 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ரவளிப்ரியா உத்தரவின்படி, தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவேல் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமைக் காவலர் உமாசங்கர், காவலர்கள் அருண்மொழி, அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் நேற்று முன்தினம் தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் சேலம் ஓமலூரைச் சேர்ந்த மனோஜ் (35), திண்டுக்கல் நிலக்கோட்டை திலீப் திவாகர்(26), சிவகங்கை கீழடியைச் சேர்ந்த ராஜாராமன் (26), அவரது தம்பி கார்த்திக் ராஜா(24) என்பதும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்குட்பட்ட ஒரு வீட்டில் கடந்த மாதம் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை இந்த கும்பல் திருடியதும், தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 74 பவுன் நகைகள், ரூ.2.05 லட்சம் ரொக்கம், இரும்பு ராடு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் போலீஸார் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது:

திருட்டு வழக்குகளில் சிக்கி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரும் அங்கு நட்பாகியுள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு 4 பேரும் மனோஜ் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து வீட்டில் உள்ள நகை, பணத்தை திருடி வந்துள்ளனர்.

இதில், நவ.12-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ஒரு வீட்டில் திருடிய 42 பவுன் நகைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடிய 17 பவுன் நகைகள், தஞ்சாவூரில் திருடிய 15 பவுன் நகைகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், தஞ்சாவூரில் இவர்கள் பிடிபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்