சாலை அமைக்காமல் ரூ. 6 லட்சம் மோசடி - ஒன்றிய உதவிப் பொறியாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் : தற்காலிக கணினி உதவியாளர் பணிநீக்கம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே உள்ள சீராளூர் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்காத நிலையில், அமைத்ததாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் உட்பட 3 பேர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சீராளூர் ஊராட்சியில் புதுத்தெருவில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதியில் சிமென்ட் சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இச்சாலை அமைக்க ரூ. 14.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.6.24 லட்சம் விடுவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை சிமென்ட் சாலை அமைக்கப்படாமல், ரூ. 6 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தஞ்சாவூர் ஆட்சியரிடம் சீராளூர் கிராமத்தைச் சேர்ந்த மு.அறிவழகன் அண்மையில் முறையிட்டார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.காந்துக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் விசாரணை நடத்தி பரிந்துரை செய்ததன்பேரில், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளர் (ஊராட்சி வளர்ச்சி) ஆர்.ஹேமலதா, தஞ்சாவூர் ஒன்றிய முன்னாள் பணிப்பார்வையாளரும், தற்போதைய திருப்பனந்தாள் பணிப் பார்வையாளருமான டி.வி.திருமாறன், பணிப் பார்வையாளர் ஜெ.செந்தில்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும், தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளராகப் பணியாற்றிய எம்.சாந்திலட்சுமியை பணிநீக்கம் செய்தும் ஆட்சியர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்