பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை : மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கோபிநாத் என்ற கோபி. இவரை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் 3 வாரம் ஜாமீன் வழங்கியது. 3 வாரத்துக்கு பிறகு சரண் அடையவும் உத்தரவிட்டது. அதன்படி கோபிநாத் சரண் அடையவில்லை. இதனால் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார். அதில், விபத்தில் சிக்கியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 2 மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை எனக் கூறியிருந்தார். அவர் மனுவுடன் தாக்கல் செய்த மருத்துவச் சான்றிதழ் பொய்யானது என்பது தெரியவந்தது. இதையடுத்து பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சி.பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோபிநாத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், மருத்துவர் பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மருத்துவர்களாக பணிபுரியும் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவது இந்திய குற்றவியல் சட்டப்படி தவறு என்பதை மனதில் கொள்ளாமல், விடுமுறை பெறுவதற்காக அனைத்து சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர்.

இதுபோன்ற பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழிப்பது, பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, எதிர்காலத்தில் பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டியது மருத்துவ கவுன்சில் கடமையாகும். இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்