திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று : குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

By செய்திப்பிரிவு

திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் சோளிபாளையம் கேஆர்சி கீர்த்தனா நகர் பகுதியை சேர்ந்த 44 வயது ஆணுக்கு, கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்தது. அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி, மகன், மகள் மற்றும் மாமியார் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் மாநகர சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று அறிகுறிகள் யாருக்கும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது. ஹெச்1என்1 வகை பன்றிக் காய்ச்சல் தான். ஆனால், தொற்றாளர் நல்ல உடல் நிலையில் உள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை. அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்