தொடர் மழையால் நொய்யல் ஆற்று தண்ணீர் திறப்பால் - கத்தாங்கண்ணி குளம் 20 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பியது : திருப்பூர் அருகே விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ஊத்துக்குளி அருகே நொய்யல் ஆற்றின் மூலம், நீர் நிரம்பும் வகையில் கத்தாங்கண்ணி குளம் அமைக்கப்பட்டுள்ளது. 108 ஏக்கர் பரப்பில், 16 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும் வகையில், 62 ஏக்கர் நேரடி பாசன ஆயக்கட்டும், சுமார் 300 ஏக்கர் மறைமுக பாசன வசதி பெறும் வகையில் இந்த நீர்நிலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் கடந்த 10 நாட்களாக மழை நீர் சென்று கொண்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவின்படி, கத்தாங்கண்ணி குளத்துக்கு நொய்யல் ஆற்று மழை நீர் திறந்துவிடப்பட்டது. 20 ஆண்டுக்கு பின் இக்குளம் முழு கொள்ளளவை தற்போது எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘20 ஆண்டுகளுக்கு பிறகு கத்தாங்கண்ணி குளம் நிரம்பியுள்ளதால், குளத்தை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். விவசாயம் செழிக்கும். மழை நீருடன், சாயநீரும் கலந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஊத்துக்குளி, கீரனூர், பாப்பினி, வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை, கொட்டி தீர்த்த கன மழையால், சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஊத்துக்குளி- சென்னிமலை செல்லும் பிரதான சாலையானது ரயில் இருப்புப் பாதைக்கு கீழ் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள கீழ்மட்ட நுழைவுப் பாலத்தின் கீழ் மழைநீருடன், கழிவு நீரும் தேங்கியது. இதனால் ஊத்துக்குளி பகுதியில் இருந்து சென்னிமலை, ஈரோடு செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். ஊத்துக்குளியில் 44 மி.மீ. மழை பதிவானது.

சிறுகளஞ்சி அய்யம்பாளையம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊத்துக்குளி நகர் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிக்கு வரும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாததால் ஆபத்தான நிலையில் ரயில்வே பாதையின் மீது ஏறி கடந்து சென்றனர். பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்