இடைத்தரகரிடம் கார், தங்க சங்கிலியை கொள்ளையடித்த இளைஞர்கள் 4 பேர் கைது :

உடுமலை அருகே மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (45). மளிகைக் கடை நடத்தி வருவதோடு, பழைய வாகனங்களை வாங்கி விற்கும் இடைத்தரகராகவும் இருந்தார்.

பொள்ளாச்சியில் உள்ள ஒரு பைனான்சியரிடம் வேலை பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் இந்திராநகரைச் சேர்ந்த ராபின்ராஜ் (24) என்பவர் சேகருக்கு அறிமுகமாகியுள்ளார்.

அப்போது தனக்கு பயன்படுத்த பழைய கார் வேண்டும் என சேகரிடம், ராபின்ராஜ் கூறியுள்ளார். மாருதி 800 கார் விற்பனைக்கு உள்ளதாக சேகர் தெரிவித்துள்ளார். காரை பார்ப்பதற்காக, ராபின்ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் (28),சேவாக் (20) மரிய அபின் (28) ஆகியோர் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஏடிஎம் சென்று பணத்தை எடுத்துத் தருவதாகக்கூறி அதே காரில் சேகரை ஏற்றிக்கொண்டு, மற்ற அனைவரும் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சேகரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு, காரில் இருந்து அவரை தள்ளிவிட்டு, அக்கும்பல் காரையும் எடுத்துச் சென்றது.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சேகர் கொடுத்த தகவலின்பேரில், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது பொள்ளாச்சி சாலையில் வந்த காரையும், தொடர்புடைய 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தளி போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE