தாக்கப்பட்ட நீலகிரி முன்னாள் எம்.பி.க்கு முன்ஜாமீன் : கட்சி பதவி பறிக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவிப்பு

நீலகிரி முன்னாள் எம்.பி. சி.கோபாலகிருஷ்ணனின் மாவட்ட அவைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சி.கோபாலகிருஷ்ணன். நீலகிரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரான சி.கோபாலகிருஷ்ணன், தீபாவளி பண்டிகையன்று, மது போதையில் அவர் வசிக்கும் முத்தாலம்மன் கோயில் தெருவில், பக்கத்து வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரை தாக்கிய கோபி ஆகியோர் மீது குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான கோபாலகிருஷ்ணன் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை தாக்கிய கோபியை போலீஸார் கைது செய்த நிலையில், கோபாலகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், போலீஸார் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், கோபாலகிருஷ்ணன் முன் ஜாமீன் கோரி உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் ஆனந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நீதிபதி சஞ்சய் பாபா, முன்னாள் எம்.பி. சி.கோபாலகிருஷ்ணனுக்கு முன் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சி.கோபாலகிருஷ்ணனின் கட்சி பதவியை பறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் எம்.பி. சி.கோபாலகிருஷ்ணன் வகித்து வந்த மாவட்ட அவைத்தலைவர் பதவியிலிருந்து அவரை விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE