மொளசி தேவம்பாளையத்தில் - பொக்லைன் மூலம் பள்ளம் தோண்ட எதிர்ப்பு :

மொளசி அடுத்த தேவம்பாளையம் கிராமத்தில் தனியார் நீரேற்று நிறுவனத்தினர் குழாய் பதிக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு அடுத்த மொளசி ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம் கிராமத்தில் தனியார் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் பாசனத்துக்காக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிணற்றில் இருந்து மண்பச்சப்பாளி, கல்பச்சப்பாளி, தேவம்பாளையம், வெயிலாம்பாளையம், கோலாரம், செருக்கலை, ராமதேவம், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 325 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேவம்பாளையம் கிராமத்தில் பள்ளம் தோண்டும்போது பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதாகவும், இதனால், அப்பகுதியில் உள்ள பள்ளி, ரேஷன் கடைகள் கட்டிடங்கள் மற்றும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது என கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், நேற்று பொக்லைன் மூலம் பள்ளம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். அப்போது, கனரக வாகனங்களைக் கொண்டு பள்ளம் தோண்டுவதால் தேவம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் மேல்புற சுவர்கள் இடிந்து விழுகிறது. எனவே, பணியை தொடரக்கூடாது என தெரிவித்தனர்.

அரசு வழிகாட்டுதல்படி குழாய் பதிக்கப்படுவதாக தனியார் நிறுவனத்தினர் தெரிவித்தனர். எனவே, நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும். தற்போதைய நிலையில் குழாய் பதிக்கும் பணியை தடுக்கக் கூடாது என போலீஸார் பொதுமக்களை எச்சரித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE