சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 7-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகமாக இருந்தபோது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்பட்ட நீர், நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மீண்டும் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் விநாடிக்கு 1,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
பின்னர் நேற்று காலை 9 மணியளவில் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாகவும், பகல் 12 மணியளவில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நேற்று மாலை நிலவரப்படி பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி, சோழவரம் ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடி என, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago